நாட்டில் 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் சுற்றுச்சூழலின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது புலிகள் எண்ணிக்கை தொடர்பாக எதிர்க் கட்சிகள், மத்திய அமைச்சகத்தை நோக்கி கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.
மத்திய அமைச்சர் கூறுகையில், “கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் நாட்டில் 2 ஆயிரத்து 226 புலிகள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்து 976 ஆக உள்ளது. அதாவது புலிகள் எண்ணிக்கை 750 வரை அதிகரித்துள்ளது” என்றார்.
மேலும், அமைச்சர் “நமது சுற்றுச்சூழல் மண்டலத்தை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்குச் சிங்கம், புலி, காண்டாமிருகம் போன்ற உயிரினங்கள் நமது அளப்பரிய சொத்துக்கள்” எனக் கூறினார்.